சென்னை: பயணிகள் நலன் கருதி ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை ஐசிஎஃப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் ஐ.சி.எஃப் மருத்துவமனை, 4 பள்ளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்கள் மற்றும் ஐசிஎஃப் ஊழியர்களின் தேவையை கருத்தில் கொண்டு இங்கு ஐசிஎஃப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் செலவினம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இப்பேருந்து நிலையத்தை மூட மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது. மேலும் குத்தகை பணம் தராததால் ஐசிஎஃப் நிர்வாகம் பேருந்து நிலையத்தை காலி செய்ய மாநகர போக்குவரத்துக் கழகத்தை நிர்பந்தித்தாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வகையில் பேருந்து சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையை கடந்த 2019-ல் மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டது. இதையடுத்து படிப்படியாக பேருந்து சேவை மாற்றியமைக்கப்பட்டது. இறுதியாக 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐசிஎஃப் வரும் பேருந்துகள் அறவே நிறுத்தப்பட்டன.
தற்போது அந்தப் பகுதி வணிக ரீதியானபயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் பேருந்தை மட்டும் நம்பியிருந்த மக்கள் பெரும் அவதியடைவதாக கூறுகின்றனர். குறிப்பாக அருகில் ஐசிஎஃப் மருத்துவமனை இருப்பதால், இங்கு வந்து செல்லும் நோயாளிகளும் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் பேருந்து நிலையத்தை நம்பியிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: கதிரேசன் (தனியார் நிறுவன ஊழியர்): ஐசிஎஃப் பேருந்து நிலையத்தில் இருந்த போது பெசன்ட் நகருக்கு 47 ஏ வழித்தட பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன. ஆனால் வில்லிவாக்கத்துக்கு பேருந்து சேவை விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது 45 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால்மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.
இதேபோல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இங்கு பேருந்து நிலையம் இருந்த போது, அது குறித்த புகாரளிக்க முடிந்தது. தற்போது அதற்கான வாய்ப்பும் இல்லை. பேருந்து சேவையை அதிகரிக்கும்போது மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் அதிகரிப்பதோடு, ஐசிஎஃப் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் உதவிகரமாக இருக்கும்.
ராஜா (ஆட்டோ ஓட்டுநர்): பேருந்து நிலையம் இங்கு செயல்பட்டபோது, பயணிகளுக்கு எப்போதும் பேருந்து சேவை கிடைக்கும். பேருந்துகள் இல்லாவிட்டால் 10 நிமிடம் மட்டும் காத்திருந்து ஆட்டோவை தேர்வு செய்வர். அதேபோல் இந்த பகுதியில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்கள் அதிகளவு பயணிப்பார்கள்.
அவர்கள் இங்கிருந்து செல்ல ஜிகேஎம் காலனி, பெரியார் நகர் போன்ற பகுதிகளுக்கும் எளிதாக செல்ல முடியும். அந்த அளவுக்கு ஆட்டோக்களும் இங்கு இயக்கப்படும். பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால், ஆட்டோவில் வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. தற்போது ஆட்டோவை இங்கு நிறுத்தினால் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மாதம் இருமுறை ரூ.500 அபராதம் செலுத்த வேண்டியிருக்கிறது. சுற்றுப் புறத்தில் உள்ள 6 ஆட்டோ நிறுத்தங்களைச் சேர்ந்த எங்களைப் போன்ற தொழிலாளிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு கூறினார். இதேபோல் தேநீர் கடை உரிமையாளர் ரவி கூறும்போது, பேருந்து நிலையம் இல்லாததால் வியாபாரம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து ஐ.சி.எஃப் அதிகாரிகளிடம் கேட்டபோது, “குத்தகைக்கு இடம் வழங்கப்பட்டதாகவும், குத்தகையை நீட்டிக்க பணம் தராததால் காலி செய்யச் சொன்னதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். எங்கள் பகுதி மக்களுக்கு பேருந்து சேவை கிடைக்கும் போது ஏன் காலி செய்ய சொல்லப் போகிறோம். இங்கு வசிப்பவர்களுக்கு பேருந்து நிலையம் மிகுந்த பயனுடையதாக இருந்தது.
குறிப்பாக இங்கிருந்து பேருந்து புறப்படுவதால் பயணிகள் அமர்வதற்கு இருக்கை கிடைக்கும். இப்போது வில்லிவாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் எங்கள் பகுதி மக்களுக்கு இருக்கை கிடைப்பதில்லை. பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டாம் என மாநகர போக்குவரத்து கழகத்திடம் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்களது முடிவின் அடிப்படையிலேயே பேருந்து நிலையம் மாற்றப்பட்டது” என்றனர்.
இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான கழிவறை வசதி கிடையாது. இதுபோன்ற போதிய அடிப்படை வசதியின்றியே பேருந்துநிலையம் செயல்பட்டு வந்தது. மேலும் சாலையின் முனையில் பேருந்து நிலையம் இருந்ததால், பேருந்துகளைத் திருப்புவது போன்ற பல்வேறு சிக்கல்களை ஓட்டுநர்கள் சந்தித்து வந்தனர்.
நிலையத்தின் செலவினத்தை கணக்கில் கொண்டு பேருந்து நிலையத்தை மூடினோம். மேலும், வில்லிவாக்கம் வரை பேருந்து சேவையை விரிவுபடுத்தியதன் மூலம் அதிக மக்கள் பயன்பெறுகின்றனர். பேருந்துநிலையத்தை மூடினாலும் அங்கிருந்தும் நாள்தோறும் 7 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பேருந்து நிறுத்தமாகவும் அந்நிலையம் செயல்படுகிறது. பேருந்து சேவைகள் குறைக்கப்படவில்லை.
மாறாக பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம். இந்த நடவடிக்கை மூலம் அங்கிருந்து பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம், மாநகர போக்குவரத்துக்கழகத்தின் செலவினமும் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அங்கு பேருந்து நிலையம் அமைவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.