சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா தனது 7 வயது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பால் பேச்சு குறைபாடு உள்ள நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள மை பாட்டி வீடு என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த பள்ளியில் பணியாற்ற வந்த இன்டர்ன்ஷிப் கல்லூரி மாணவர்கள் சிறுவன் பள்ளியில் சித்தரவதை செய்யப்படுவதாகவும், கை, கால்கள் கட்டப்படுவதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் சரண்யா உடனே மழலையர் பள்ளி உரிமையாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சியிடம் சென்று தனது மகனை துன்புறுத்தியது குறித்து கேட்டுள்ளார். அதற்கு மழலைப் பள்ளியின் உரிமையாளர் மீனாட்சி சரண்யாவை ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சரண்யா வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் தனது மகன் துன்புறுத்தப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.
சரண்யா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவனை துன்புறுத்தியதுடன் அதனை தட்டி கேட்க சென்ற தாய் சரண்யாவை பள்ளி உரிமையாளர் மீனாட்சி மிரட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகி மீனாட்சி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.