மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும், பூநகரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பிரதேச மட்ட தொழிற்சந்தை நாளை (23) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த தொழிற்சந்தை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00மணிக்கு ஆரம்பமாகி பி.ப 1.00 மணிவரை நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட நிகழ்வானது மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்று வருகின்றது.
பிரதேசத்தில் இருக்கின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக குறித்த பிரதேச மட்ட தொழிற் சந்தையானது நடாத்தப்படுகிறது.
அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் உள்ள தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்களை அழைத்து, தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குநர்களையும் இணைத்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இத்தொழிற் சந்தையில் சேவைத்துறை, தனியார் வைத்தியசாலை, வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், விவசாயத்துறை வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் தொழில் பயிற்சி நெறிகள் தொடர்பான ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.
எனவே, தொழிலற்ற இளைஞர் யுவதிகள் மற்றும் தொழில் தகைமையை மேலும் மேம்படுத்த ஆர்வமுடையவர்கள் இவ் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது, குறித்த பிரதேச மட்ட தொழிற் சந்தையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.