பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ப்ளேஸ்கூல் ஒன்றில் நடந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீன காலத்தில் பெரும்பாலான ஜோடிகள் கூட்டுக் குடும்பங்களாக இருப்பதில்லை. அனைவருமே தனிக்குடித்தனமே நடத்தி வருகின்றனர். இதற்குத் பல காரணங்களைச் சொன்னாலும் இதனால் வேறு விதமான பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது.
குறிப்பாக வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளப் பெரியவர்கள் யாரும் இருப்பதில்லை என்பதால் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர்: பெரும்பாலும் இப்போது அனைவருக்கும் வேலைகளும் நகரத்திலேயே இருக்கிறது. இதனால் அனைத்து தம்பதிகளும் நகரங்களில் தனித்தனியாகவே இருந்து வருகின்றனர். நகரங்களிலேயே பெற்றோர் வசித்தாலும் கூட பெரும்பாலான தம்பதிகள் அவர்களுடன் வசிப்பதில்லை. வீடுகளில் பெரியவர்கள் இல்லாமல் போவதால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் ஆள் இருப்பதில்லை.
இதன் காரணமாகவே ப்ளே ஸ்கூல் எல்லாம் புதிது புதிதாக வந்துள்ளது. ப்ளே ஸ்கூல், ப்ரீகேஜி எனச் சின்ன வயதில் இருந்தே குழந்தைகள் இப்படி பள்ளிகளிலேயே இருக்க வேண்டி உள்ளது. விடுமுறை நாட்களிலும் வேலைக்குச் செல்லும் பெற்றோர் டே கேரில் குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள். இதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே வலுவான ஒரு பந்தம் ஏற்படாமல் போகவும் கூட வாய்ப்பிருக்கிறது.
ஷாக்: அதேபோல ப்ளே ஸ்கூல்களுக்கு பெருந்தொகையைக் கட்டணமாக வசூலித்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள், குழந்தைகளையும் முறையாகப் பார்த்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது. பொதுவாக ஒரே இடத்தில் பல குழந்தைகள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு மோதல்கள் ஏற்படவே செய்யும்.. இதன் காரணமாகவே எப்போதும் பள்ளிகளில் குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு ஆசிரியர் செல்லக் கூடாது என்பார்கள்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு வகுப்பறையில் பல குழந்தைகள் உள்ளனர். அங்கிருக்கும் பணியாளர் குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து நகர்கிறார். அப்போது அவர் செல்லும் போதே சில குழந்தைகள் அவரை அங்கிருந்து செல்ல வேண்டாம் என கைகளைப் பிடித்து இழுக்கிறார்கள். இருப்பினும், அதையும் தாண்டி அவர் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அந்த குழந்தைகள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதற்கான காரணம் விரைவிலேயே தெரிகிறது.
தாக்குதல்: அதாவது அந்த பணியாளர்கள் அங்கிருந்து கிளம்பிய மறுநிமிடமே அந்த ப்ளே ஸ்கூலில் இருக்கும் மூத்த மாணவர் ஒருவர், தன்னை விட இளையவனைக் கொடூரமாகத் தாக்குகிறார். பணியாளர் சென்ற மறுநொடியே அந்த சிறுவனை இந்த பையன் தாக்கத் தொடங்குகிறான். அந்த சிறுவன் தள்ளிச் சென்றாலும், ஆசிரியர் வருகிறாரா என்று அந்த மூத்த மாணவன் ஜன்னல் வழியாக பார்த்து வரவில்லை என உறுதி செய்த பிறகு மீண்டும் மீண்டும் தாக்குகிறான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவம் பெங்களூரில் சிக்கலசந்திரா பகுதியில் உள்ள பள்ளியில் நடந்ததாகத் தெரிகிறது. இருவருமே சின்ன குழந்தைகள் என்பதால் அவர்களைச் சொல்லி எதுவும் ஆகப் போவதில்லை.. ஆனால், இத்தனை குழந்தைகள் இருக்கும் போது, எப்படி அவர்களைத் தனியாக விட்டுச் செல்லலாம் என்பது குறித்தே பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில். இதைக் கவனித்த பெங்களூர் போலீஸ் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வீட்டில் தனியாக இருப்பதை விட ப்ளே ஸ்கூலில் குழந்தைகள் பத்திரமாக இருப்பார்கள் எனப் பெற்றோர் அனுப்பி வைக்கும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.