கூண்டுக்குள் நேருக்குநேர் மோத தயாரா? என எலான் மஸ்க் விடுத்த சவாலை ஏற்றுள்ள மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், மோதலுக்கு தானும் தயாரென சம்மதம் தெரிவித்து உள்ளார்.
அதோடு மோதலுக்கான இருப்பிடத்தை அனுப்பவும் என ஜூக்கர்பெர்க் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் தற்காப்பு கலை வீரர்கள் போட்டியிடும் ”Vegas Octagon” என்ற இடத்தில் மோதலை வைத்துக் கொள்ளலாம் என்று மஸ்க் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
51 வயதான மஸ்க், கராத்தே, டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளில் சிறுவயதில் பயிற்சி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்காப்பு கலை வீரரான 39 வயது ஜூக்கர்பெர்க், அண்மையில் ஜியு-ஜிட்சு போட்டியில் வெற்றிபெற்றிருந்தார். கடினமான மர்ப் சவாலை 40 நிமிடங்களில் முடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
ட்விட்டர் பயனர்களின் நிலைமை குறித்து ஜூக்கர்பெர்க் தெரிவித்திருந்த கருத்தை கேலி செய்து, மஸ்க் ட்வீட் செய்திருந்தது மோதல் போக்காக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.