கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
10 மாவட்டங்களில் பாதிப்பு: பக்சா, பர்பேடா, டர்ராங், தேமாஜி, துப்ரி, கோக்ரஜார், லக்ஷிம்பூர், நல்பாரி, சோனித்பூர், உதால்குரி ஆகிய 10 மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நல்பாரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு மட்டும் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பக்சா மாவட்டத்தில் 26,500 பேரும், லக்ஷிம்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 5 மாவட்டங்களில் 14 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2,091 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், 5 மாவட்டங்களில் 17 நிவாரண விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.
மீட்புப் பணிகள்: “மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்கும் நோக்கில் ராணுவம், துணை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீ அணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கிய 1,280 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், 780 கிராமங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. 10 ஆயிரத்து 591 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியான பெக்கி மூன்று இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்கிறது” என அசாம் மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.