மக்களிடம் மிகப்பிரபலமான கப்பல் டைட்டானிக். இந்தக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14, 15-ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 1,500 பேர் வரை உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிச் சிதிலமடைந்துக் கிடக்கும் பகுதியில் தொடர்ச்சியாக இன்றுவரை ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, நீருக்கு அடியில் இருக்கும் டைட்டானிக் கப்பலைக் காண சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக இருக்கின்றனர்.
அதை சமன் செய்யும் விதமாக டூர் ஆபரேட்டரான OceanGate Expeditions நிறுவனம் நபருக்கு 250,000 டாலர் செலவில் எட்டு நாள் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடும் சுற்றுலா நீர்முழ்கிக் கப்பலை இயக்கி வருகிறது. அதன் அடிப்படையில், பிரிட்டிஷ் கோடீஸ்வர ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், புகழ்பெற்ற பிரெஞ்சு நீச்சல்காரர் பால்-ஹென்றி நர்ஜோலெட், பாகிஸ்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத், அவரின் 19 வயது மகன் சுலைமான் தாவூத், மற்றும் அந்த கப்பலை இயக்கிய OceanGate Expeditions-ன் நிறுவனர் ஸ்டோக்டன் ருஷ்(Stockton Rush) ஆகியோர் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்குச் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் சென்றனர்.
இந்தக் கப்பல் கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை. அந்தக் கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை மற்றும் கனடா கடலோர காவல்படையினர் தேடிவருகின்றனர். இந்த நிலையில், டைட்டன் நீர்மூழ்கி கப்பலை இயக்கிய கேப்டனுக்கும், டைட்டானிக் கப்பலுக்கும் சம்பந்தம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 1912-ல் டைட்டானிக் கப்பலில் பயணித்தவர்களில் பெரும் வணிக வியாபாரி இசிடோர் ஸ்ட்ராஸ் மற்றும் அவரது மனைவி ஐடா (Ida). இவர்கள் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்புப் பயணிகளாகப் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இசிடோர் ஸ்ட்ராஸ் – ஐடா தம்பதியின் எள்ளுப்பேத்தி வெண்டி ருஷ். இவர் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் நிறுவனமான OceanGate-ன் CEO ஸ்டோக்டன் ருஷ் என்பவரை 1986-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அவர்தான் தற்போது காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலை இயக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நீரில் மூழ்கிய டைட்டானிக் கப்பலுக்கும் தற்போது காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பலை இயக்கிய கேப்டனுக்கு இருக்கும் தொடர்பு தற்போது சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.