பீஜிங், ‘அதிபர் ஷீ ஜின்பிங்கை, சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளது, மிகவும் அபத்தமானது; பொறுப்பற்ற செயல்’ என, சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் சமீபத்தில் பீஜிங் சென்றார்.
அங்கு, சீன வெளிஉறவுத்துறை அமைச்சர் குவின் காங் மற்றும் அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு நடந்த ஓரிரு நாளில், வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ஜோ பைடன், ‘அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில், விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலுான் விவகாரத்தால் தற்போது ஏற்பட்டு வரும் பதற்றங்கள், சீன அதிபர் ஜின்பிங்கை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளன.
‘நடந்த விபரங்கள் தெரியாத நிலையில், இது போன்ற சம்பவங்கள் சர்வாதிகாரிகளுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கும்’ என, பேசினார்.
இந்த கருத்தால் சீனா ஆத்திரம் அடைந்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:
பலுான் விவகாரத்தை அமெரிக்கா அமைதியான முறையில் கையாண்டு இருக்க வேண்டும். ஆனால், உண்மைகளை திரித்து, அந்த சம்பவத்தை அமெரிக்கா மிகைப்படுத்தி உள்ளது.
இது, அவர்களின் ஏமாற்று வேலை மற்றும் மேலாதிக்க தன்மையை வெளிப்படுத்துகிறது.
அதிபர் ஷீ ஜின்பிங் குறித்து அமெரிக்க அதிபர் கூறியிருப்பது, முற்றிலும் அபத்தமான, பொறுப்பற்ற செயல். உண்மைகளுக்கு முற்றிலும் எதிரானது. துாதரக நெறிமுறைகளையும், சீனாவின் அரசியல் கண்ணியத்தையும் மீறிஉள்ளது.
இது, அப்பட்டமான அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. இதற்கு, சீனா கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் பதிவு செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்