விருதுநகர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தம்பி என பாசத்தோடு அழைத்து அவர் நேர்மையான அதிகாரி என பாராட்டினார். அதேவேளையில் அடுத்த சில வினாடிகளில் சீமான் வைத்த ட்விஸ்ட்டால் பாஜகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார்.
முன்னதாக சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சீமான் பதிலளித்தார். இதுதொடர்பான விபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடிய நடவடிக்கை பற்றி முதலில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛எங்களை பொறுத்தமட்டில் அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்பது தான். விசாரித்த வரையில் சரியாக வியாபாரம் ஆகாத கடைகளை மூடுவதாக கூறுகின்றனர்” என விரக்தியை வெளிக்காட்டினார்.
இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதாவது சமீபத்தில் அண்ணாமலை, ‛‛எங்களுடைய கருத்துக்கும், சீமான் கருத்துக்கும் ஒற்றுமை உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என நாங்கள் இருவரும் கூறுகிறோம்” என பேசியிருந்தார். அதுபற்றி சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சீமான், ‛‛ தமிழகத்தில் இதுவரை பாஜக ஆட்சி என்பது அமையவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது. அங்கு ஊழல் இல்லை என கூறமுடியாது. நான் அறிந்தவரை தம்பி அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி நேர்மையான, ஊழலற்ற கட்சியா என்றால் இல்லை. அதிகாரத்துக்கு வந்த பிறகும் இருப்பதுதான் சாதனை” என்றார்.
இதையடுத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் பாதிப்பு இருக்குமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சீமான், ‛‛ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் பணம் கொடுக்காமல் வாக்கு வாங்க முடியாது. திமுக மற்றும் அதிமுகவுக்கு வாக்களிப்போரின் மனநிலையை மாற்ற முடியாது. புதிதாக வாக்களிப்பவர்கள் அவருக்கு வாய்ப்பு தந்தால் என்ன என்று நினைக்கலாம். மேலும் இரு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் அவருக்கு ஆதரவளிக்கலாம். யாரும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது” என்றார்.