பாட்னா: ஒரு குடும்பமாக இருந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்போம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகம் தொடர்பாக ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் பிஹார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை கூடுகின்றன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னாவுக்கு வருகை தந்த மம்தா பானர்ஜி, பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லாலு பிரசாத் யாதவ் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. அவரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்தவர். சிறையில் அடைத்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. பாஜகவை எதிர்கொள்வதற்கு ஏற்ற வலிமையுடன் லாலு பிரசாத் தற்போது இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
அப்போது, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேரதலின்போது எவ்வாறு கூட்டணி அமைப்பீர்கள் என்றும், டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆதரவு கிட்டாவிட்டால் வெளிநடப்பு செய்வோம் என அக்கட்சி மிரட்டுவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, “நாளை என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது. ஆனால், பாஜகவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம். பாஜகவை நேருக்கு நேர் சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கத்தில் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். அதன் விவரம் > பாட்னா கூட்டம் | எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையில் தீவிரமும் உண்மையும் இல்லை: மாயாவதி விமர்சனம்