வாட்டிக்கன்: கத்தோலிக்க தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசுவதை தவிர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி நிகழ்ச்சிகளில் பேசுவதை போப் தவிர்த்து வருகிறார்.
86 வயதாகும் போப் பிரான்சிஸ் உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களின் குருவாக திகழ்கிறார். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. அவரது குடல் சுருங்கியதால் அதன் முனையில் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 33 செ.மீ அளவில் குடல் வெட்டி எடுக்கப்பட்டது. இதனையடுத்து நல்ல ஆரோக்யத்தோடு இருந்து போப், கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து அவரை பரிசோதித்ததில் குடலில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மட்டுமல்லாது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 7ம் தேதி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதனையடுத்து 16ம் தேதி வரை மருத்துவமனையில் ஓய்வு பெற்று வந்த அவர் பின்னர் வாட்டிக்கன் திரும்பினார்.
அவரை வரவேற்க காத்திருந்த மக்களுக்கு தனது கைகளை உயர்த்தி நன்றி கூறினார். இதனையடுத்து செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கமாக நடைபெறும் ஞாயிறு தின கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். மேலும், கிரீஸ் நாட்டில் நடந்த படகு விபத்தையும் நினைவு கூர்ந்து, உகாண்டா பள்ளியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தையும் கண்டித்தார்.
இந்த உரைக்கு பின்னர் அடுத்தடுத்த உரைகளை போப் தவிர்த்து வருகிறார். இன்று காலை நடைபெற்ற ஒரு மாநாட்டில் இவர் பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக கூறி போப் இந்த உரையாடலை தவிர்த்துவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் இன்னும் மயக்க மருந்துகளின் விளைவுகளிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. எனது சுவாசம் இயல்பாக இல்லை” என்று கூறியுள்ளார். இது கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களிடம் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.