வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் சொகுசு கப்பலை பார்வையிடுவதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா சென்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் தனது பயணத்தை தொடங்கியது.
ஆனால் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படையினரும் கனேடிய விமான படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்மூழ்கி கப்பல் மாயமான பகுதியில் வித்தியாசமான சத்தம் கேட்பதாக அமெரிக்க கடலோர காவல் படையினர் நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சத்தம் கேட்டதாக கூறப்பட்ட பகுதியில் மீட்பு கப்பல்களும் விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து கடலுக்கு அடியில் மாயமான டைட்டன் நீர்முழ்கி கப்பலை தேடும் பணியில் நீர்மூழ்கி ரோபோட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி 5வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதனிடைய நீர்முழ்கி கப்பலில் பயணிகளுக்கான ஆக்ஸிஜன் இருப்பு 96 மணி நேரம் அதாவது இன்று மாலை வரை மட்டுமே வரும் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இதனால் அந்த நீர் மூழ்கி கப்பலில் இருந்த பைலட் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் தொழிலதிபர் ஷாஷாதா, அவரது மகன் சுலேமான் தாவூத், டைட்டானிக் கப்பல் பற்றி ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் நாட்டின் கடற்படை வீரர் பால் ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரின் நிலை என்ன ஆனது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி டைட்டன் நீர்மூழ்கி கப்பல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் டைட்டன் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. அது காணாமல் போன முக்கியமான 96 நேரத்தை நெருங்கிவிட்டது. பெரும் கவலையாக உள்ளது, பாதுகாப்பான மீட்புக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.