வாஷிங்டன்:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வெள்ளை மாளிகைக்கு சென்று அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். அப்போது மோடி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதல் நாளான நேற்று நியூயார்க் நகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் ஜோ பைடன் மற்றும் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில், அங்கு கூடி நின்ற அமெரிக்க இந்தியர்கள், பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டனர். இந்த கோஷத்தை மோடியே எதிர்பார்க்காததால் அவரே ஒரு கணம் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றார். இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களும் இந்திய – அமெரிக்க உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
அமெரிக்காவும், இந்தியாவும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாத கூட்டாளிகள் என்பது நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த அதிபர் ஜோ பைடனுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பிரதமரான பிறகு பல முறை வெள்ளை மாளிகைக்கு வந்திருக்கிறேன். ஆனால், இந்திய – அமெரிக்கர்கள் நிரம்பியுள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைவது இதுவே முதன்முறை என மோடி நெகிழ்ச்சிகரமாக பேசினார்.