தமிழக பட்டதாரி இளைஞர்களுக்கு திறமை இல்லை.. ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு

சென்னை:
தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு தமிழக பட்டதாரி மாணவர்களுக்கு திறமை இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதை தீர்க்கும் வழிமுறைகள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:

இந்தியாவில் இதுவரை அமல்படுத்தப்பட்ட கல்விக்கொள்கைகள் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட படிப்பை நோக்கியே இருந்தது. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் புதிய கல்விக்கொள்கையானது, இந்திய இளைஞர்களை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்தக் கல்விக்கொள்கையானது வெறும் ஐஏஎஸ் அதிகாரிகளால் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல. நூற்றுக்கணக்கான கல்வியாளர்களும் சேர்ந்து உருவாக்கிய கல்விக்கொள்கை ஆகும்.

இன்றைய சூழலில், இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை பொறுத்தே தொழில் நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தி வருகின்றன. இதன் காரணமாகவே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருந்த போதிலும், பணித்திறன் இல்லாததால் பல பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் இளங்கலை பட்டம் முடித்த 70 சதவீதம் பேருக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் விரிவுபடுத்தப்படாமல் இருக்கின்றன. இதுகுறித்து அந்த தொழில் நிறுவனங்களிடம் கேட்ட போது, தமிழகத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்களை பணியமர்த்தும் அளவுக்கு அவர்களிடம் திறன் இல்லை என்ற அதிர்ச்சிகரமான பதிலே வருகிறது. இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.