பாட்னா: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.
வரும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, புதிய ஒருங்கிணைப்புக்கான ஆதரவை கோரினார்.
இதையடுத்து, ஜூன் 12-ம் தேதி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி மாற்றப்பட்டது. அதன்படி, இந்த கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நாளை (ஜூன் 23) நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இக்கூட்டத்தில் தான் பங்கேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் தலைநகர் பாட்னா சென்றார். பாட்னாவில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைச் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “பாட்னா வந்தடைந்தேன். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி மற்றும் பிஹார் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இதமான வரவேற்பைப் பெற்றேன். ஆசிய சோதி புத்தர், மக்கள் நாயகர் கர்ப்பூரி தாக்கூர், பி.பி. மண்டல் ஆகியோரை நமக்களித்த மண்ணில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த பாசிச – எதேச்சாதிகார ஒன்றிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா மீண்டும் மலர, ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் இத்தகைய சமூக நீதி மண்ணில் இருந்து எழத் தொடங்குவதில் எந்த வியப்பும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், “மூத்த தலைவர் லாலு பிரசாத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். கருணாநிதி மீது லாலு பிரசாத் கொண்டிருந்த அன்பை நாம் அனைவரும் நன்கறிவோம். அதே அன்புடன் என்னையும் வரவேற்று, சமூகநீதிச் சுடரை உயர்த்திப் பிடிக்க வாழ்த்தினார். நீண்ட காலம் நலமுடன் திகழ்ந்து எங்களை வழிநடத்திட வேண்டும் என்று நானும் அவரிடம் கோரினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைய கூட்டத்துக்குத் தயாராகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நாளை நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நாளை இரவு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.