புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்கள் இருவருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
செவிலியர்களுக்கான 2022 மற்றும் 2023-ம் ஆண்டின் தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கினார். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 22, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகளை வழங்கினார்.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் உன்னத மருத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் கைவிளக்கேந்திய காரிகை என்றழைக்கப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2022 மற்றும் 2023ம் ஆண்டுக்கான இந்த விருதுகள் தலா 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்களான கணபதி சாந்திக்கு 2022-ம் ஆண்டுக்கான விருதும், சுகந்திக்கு 2023-ம் ஆண்டுக்கான விருதும், வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த சத்தியக்கனி தங்கராஜூக்கு 2023-ம் ஆண்டுக்கான விருதும், வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.