பன்றிகள் வளர்த்து மகளை 12 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்த நிலையில் , சாதி சான்றிதழ் இல்லை என்று எந்த கல்லூரியிலும் சேர்க்க மறுத்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தாய் உறவினர்களுடன் போராட்டம் நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வாகி முதல் தலைமுறை பட்டதாரியாக சாதிக்க துடித்த தனது மகளுக்கு , உரிய நேரத்தில் ஜாதி சான்று கிடைக்காததால் உயிரை மாய்த்ததாக கூறி அவரது தாய் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!
திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பங்களை சேர்ந்த 80 நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் பன்றி வளர்த்து அதனை விற்பனை செய்வதாகும்.
இங்கு வசிக்கும் சரோஜா என்பவரது மகள் ராஜேஸ்வரி , 12 ஆம் வகுப்பில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தனியார் கல்லூரிகளில் கல்லூரி படிப்பை தொடர விண்ணப்பம் செய்திருந்தார்.
அனைத்து கல்லூரியிலும் ஜாதி சான்று கட்டாயம் என்று கூறிய நிலையில் மாணவி தனது பெற்றோருடன் தங்களுக்கு பன்னியாண்டி என்ற சாதி சான்று வழங்க கேட்டு அதிகாரிகளை நாடி உள்ளனர். இந்த சாதி பட்டியலின சாதிக்குள் வருவதால் உடனடியாக வழங்காமல் அதிகாரிகள் தாமதித்த நிலையில், மாணவியால் கல்லூரியில் சேர இயலவில்லை. அதே நேரத்தில் ராஜேஸ்வரியுடன் பள்ளியில் படித்த மற்ற மாணவிகள் அவர்களது சாதி சான்று கொடுத்ததால் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு மனமுடைந்த மாணவி ராஜேஸ்வரி பூச்சி மருந்து குடித்து விபரீத முடிவை தேடிக் கொள்ள முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தங்களுக்கு சாதி சான்று வழங்காததால் மகள் விஷம் குடித்ததாக கூறி மாணவியின் தாய் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்த போலீசார் மாணவியின் தாய் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தி வீட்டு அனுப்பி வைத்த நிலையில்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். தனது மகளின் சோக முடிவு கண்டு கலங்கி அழுதார் தாய் சரோஜா
மாணவியின் தாய் கூறிய குற்றசாட்டு குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினியிடம் கேட்ட போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை பன்னியாண்டி என்ற வகுப்பினர் பதிவு ஆகவில்லை எனவும், குறிப்பாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட பன்னியாண்டி என்ற பிரிவினருக்கு மட்டும் ஜாதி சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மாணவியின் பெற்றோர் அளித்த மனுவை சென்னை மானுடவியல் நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைத்தால் பன்னியாண்டி என்ற ஜாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி தெரிவித்தார்.