இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உயர்மட்டத் தலைவர்களையும், எலான் மஸ்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களையும் இந்தியா வம்சாவளியினரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறார்.
அவ்வகையில், இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடனின் விருந்து அழைப்பை ஏற்று வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கையால் செய்யப்பட்ட, பழைமையான அமெரிக்கப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. அதிபர் ஜோ பைடன் விண்டேஜ் அமெரிக்க கேமரா, ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவின் காப்புரிமையின் காப்பக தொலைநகல் அச்சு மற்றும் அமெரிக்க வனவிலங்குப் புகைப்படம் பற்றிய ஹார்டுகவர் புத்தகம் ஆகியவற்றை பரிசாக அளித்தார்.
மோடியும், பைடனுக்கு வேலைப்பாடுகள் மிகுந்த, கர்நாடகாவின் மைசூர் சந்தனப் பெட்டியையும், ‘The Ten Principal Upanishads’ என்ற புத்தகத்தையும் பரிசளித்தார்.
மேலும், ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட 7.5 காரட் பச்சை வைரத்தைப் பரிசாக வழங்கினார்.
இதையடுத்து இருநாட்டின் கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரின் திறமைகளை மேம்படுத்துவது மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடல் நடந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இரவு உணவிற்காகப் பல்வேறு வகையான உயர்தர உணவுகளை வெள்ளை மாளிகை தயார் செய்துள்ளது.
மோடி சைவ உணவுப் பிரியர் என்பதால் கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல செஃப் நினா கர்ட்டிஸ், வெள்ளை மாளிகையின் ஊழியர்களுடன் இணைந்து, பிரமிக்க வைக்கும் சைவ உணவுகளைத் தயார் செய்துள்ளார்.
இதில் பெரும்பாலும் இந்திய உணவுக் கலாசாரம் சார்ந்த சிறுதானியங்கள் மற்றும் திணை வகைகளே இடம்பெறுகின்றன.
இந்த மெனுவில் எலுமிச்சை – வெந்தயம் தயிர் சாஸ், மிருதுவான தினை கேக்குகள், கோடைக்கால ஸ்குவாஷ்கள், மேரினேட் செய்யப்பட்ட தினை மற்றும் வறுக்கப்பட்ட சோள கர்னல் சாலட், கம்பிரஸ்டு தர்ப்பூசணி, கஞ்சியான வெண்ணெய் சாஸ், அடைத்த போர்ட்டோபெல்லோ காளான்கள், க்ரீமி குங்குமப்பூ, ரிசொட்டோ-ரோஸ், இன்ஃபுர் ரோஸ் ஸ்ட்ராபெரி கேக்குகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஸ்டோன் டவர் சார்டோன்னே ‘கிறிஸ்டி’ 2021, படேல் ரெட் பிளெண்ட் 2019 ஒயின், மற்றும் டொமைன் கார்னெரோஸ் ப்ரூட் ரோஸ் உள்ளிட்ட பல உயர் ரக பானங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் இருக்கும் ‘படேல் ரெட் பிளெண்ட் 2019’ ரெட் வைன் குஜராத்திலிருந்து அமெரிக்காவில் செட்டிலான இந்தியரான ராஜ் படேலுக்குச் சொந்தமான கலிபோர்னியா நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலையில் இருந்து பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டது. பிரான்ஸின் பல்வேறு வெரைட்டியான கறுப்பு திராட்சை மற்றும் கேபர்நெட் சாவிக்னான் திராட்சைகளின் கலவையால் இந்த ‘படேல் ரெட் பிளெண்ட் 2019’ செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உணவு விருந்தைத் தொடர்ந்து கிராமி விருது பெற்ற வயலின் கலைஞரான ஜோசுவா பெல் மற்றும் பென் மசாலா (Penn Masala) உள்ளிட்ட பல கலைஞரின் இசை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
400-க்கும் மேற்பட்டோர் பங்குபெறும் இந்த பிரமாண்ட உணவு விருந்தில் ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்திய நாடெல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.