சென்னை:
தனக்கு சொந்தமான மழலையர் பள்ளியில் ஒரு குழந்தையின் கை, கால்களை கட்டிப்போட்டு தாக்கிய பாஜக பெண் நிர்வாகி மீனாட்சியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ள மீனாட்சி என்பவர்தான் இந்தப் பள்ளியின் உரிமையாளர் ஆவார். இந்தப் பள்ளியில் ராஜாஜி நகரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் 3 வயது ஆண் குழந்தை பயின்று வந்தது. இந்த சூழலில், அந்த சிறுவன் இங்கு சேர்ந்தது முதலாகவே அவனை மீனாட்சி அடிக்கடி தாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த சூழலில், ஒருநாள் அந்த சிறுவனின் கை, கால்களை கட்டிப்போட்டு மீனாட்சி கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், குழந்தையின் தாயார் சரண்யாவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, தனது குழந்தையை கட்டிப்போட்டு அடித்தது குறித்து மீனாட்சியிடம் சரண்யா கேட்க, அவரோ மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, சரண்யா வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, குழந்தை துன்புறத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மீனாட்சியை போலீஸார் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.