புதுடில்லி, சீன இணையதளங்கள், செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து வருவதை அடுத்து, சீனாவைச் சேர்ந்த, ‘சைபர்’ மோசடி பேர்வழிகள், ‘டாட் இன்’ என்ற இந்திய இணையதளங்களை வாங்கி, அதன் வாயிலாக நம் தகவல்களை திருடும் விஷயம் அம்பலமாகி உள்ளது.
அச்சுறுத்தல்
சீனாவைச் சேர்ந்த இணையதளங்கள் மற்றும் ‘மொபைல் போன்’ செயலிகள் வாயிலாக, நம் நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதுடன், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதை அடுத்து, அவற்றுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த தகவல் திருட்டு வாயிலாக பல்வேறு பொருளாதார மோசடிகளும் அரங்கேறின.
இதையடுத்து, சீன இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்புகளுக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகின்றன.
இந்த நடைமுறையால் அதிக கால தாமதமாவதை தடுக்க, சீனாவைச் சேர்ந்த சைபர் மோசடி பேர்வழிகள் குறுக்கு வழியில் ஊடுருவி வருகின்றனர்.
தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு, கடந்த மே மாதம் தங்கள் வழக்கமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட போது, சந்தேகத்துக்குரிய சில சீன சைபர் மோசடி நிறுவனங்கள், நான்கு நாட்களில் 2,000 இணையதளங்களை நம் நாட்டில் பதிவு செய்தது தெரியவந்தது.
சூதாட்ட தளம்
இந்தியாவில் பதிவு பெறும் இணைய தளங்கள், ‘டாட் இன்’ என்ற அடையாளத்தை கொண்டுள்ளன. இந்த டாட் இன் இணையதளங்களை பதிவு செய்வதன் வாயிலாக, தங்களை இந்திய நிறுவனங்களை போல அவர்கள் காட்டிக் கொள்கின்றனர்.
இவை பெரும்பாலும், ‘போர்னோகிராபி’ எனப்படும் பாலியல் இச்சைகளை துாண்டும் இணையதளங்கள் அல்லது சூதாட்ட தளங்களாக செயல்பட்டு வருகின்றன.
இதை கணினிகளிலோ, மொபைல் போன் செயலி வாயிலாகவோ பயன்படுத்தும் போது, பயனாளரின் தனிப்பட்ட தகவல்களை அந்நிறுவனம் திருடுகிறது.
அதன் வாயிலாக, பொருளாதார குற்றங்கள் உட்பட பல்வேறு முறைகேடுகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
‘ஆண்ட்ராய்டு’ மற்றும், ஐ.ஓ.எஸ்., மொபைல் போன்களில் இந்த திருட்டு கள் அரங்கேறுகின்றன.
நடவடிக்கை
இதையடுத்து, வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், நம் இணையதளங்களை சட்டவிரோதமாக வாங்குவதை தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்காக, வெளிநாட்டு நிறுவனங்கள் நம் இணையதளங்களை பதிவு செய்யும் நடைமுறையில் தடுப்பு முறைகள் மற்றும் மாற்றங்களை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்