வெள்ளை மாளிகையில் சைவ விருந்து.. அதிபர் மனைவிக்கு 7.5 கேரட் வைரம்… மோடி – பைடன் சந்திப்பில் ருசிகரம்..!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட வெள்ளை எள்ளை வெள்ளிப் பெட்டியில் வைத்து பரிசளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் டி.சி. சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலைய வாயிலில் இருந்தே அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வாசலுக்கே வந்து வரவேற்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு “பத்து முதன்மை உபநிடதங்கள்” என்ற ஆங்கில புத்தகத்தையும் வெள்ளி விநாயகர் சிலை மற்றும் விளக்கையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். 

கூடவே, பத்து சிறிய வெள்ளி பெட்டிகள் அடங்கிய சந்தன பெட்டி ஒன்றையும் பிரதமர் மோடி பைடனுக்கு பரிசளித்தார். அதில் வெள்ளித தேங்காய், ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்ட 24 காரட் தங்க நாணயம், 99.5 சதவீதம் தூய வெள்ளி நாணயம், தமிழ் நாட்டின் வெள்ளை எள், கர்நாடகாவின் சந்தனக் கட்டை, பஞ்சாப் நெய், ஜார்க்கண்டின் துஸ்ஸார் பட்டு, உத்தரகாண்டின் பாஸ்மதி அரிசி, மஹாராஷ்ட்ர வெல்லம், குஜராத் உப்பு ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இரு நாடுகளின் உறவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பொருட்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை குறிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட 7.5 காரட் வைரத்தையும் பிரதமர் பரிசளித்தார். 

பதிலுக்கு, பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட அரிய புத்தகம் ஒன்றின் கையெழுத்துப் பிரதியை ஜோ பைடன் தம்பதியினர் வழங்கினர். பழமையான அமெரிக்கக் கேமரா மற்றும் வனவிலங்கு புகைப்படக் காட்சிப் புத்தகத்தையும் பரிசளித்தனர்.

இதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் தாமரை மலர்களாலும் மயில் பீலிகளாலும் அலங்கரிக்கப்பட்ட அறையில் பிரதமர் மோடிக்கு இரவு சைவ விருந்து அளிக்கப்பட்டது. திணை உள்ளிட்ட சிறு தானியங்களால் ஆன உணவு வகைகளும், தர்பூசணி மற்றும் பச்சை காய்கறிகளுடனான சாலட், வெண்ணெய் சாஸ், வெண்ணெய் பழம், பாஸ்த்தா, காளான் ஆகியவை விருந்தில் இடம் பெற்றிருந்தன.

இந்த சந்திப்பின் போது அதிபர் ஜோ பைடனுடன் சந்தித்த போது பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக உரையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.