புதுடில்லி, இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார்கள் தொடர்பான வழக்குகளை, புதுடில்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனையர் சிலர் பாலியல் புகார் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர், ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில், புதுடில்லி போலீசார், கடந்த, 15ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை எந்த நீதிமன்றத்துக்கு ஒதுக்குவது என்பது குறித்து புதுடில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மற்றொரு வழக்கை, கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஹர்தீர் சிங் ஜஸ்பால் விசாரித்து வருகிறார். அதனால், இந்த வழக்குகளையும் அவரே விசாரிப்பார் என, தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் மஹிமா ராய் சிங் நேற்று அறிவித்தார்.
இதில், ஆறு பெண் மல்யுத்த வீராங்கனையர் கூறிய புகார்கள் தொடர்பான வழக்கை, இந்த நீதிபதி விசாரிப்பார். மற்றொரு சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் போதிய ஆதாரம் இல்லாததால், இந்த புகாரை நிராகரிக்க, புதுடில்லி போலீசார் பரிந்துரைத்திருந்தனர்.
இதற்கிடையே, அந்தப் புகாரை திரும்பப் பெறுவதாக, அந்த சிறுமியின் பெற்றோரும் தெரிவித்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்