தஞ்சாவூர்: குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்வர் அறிவித்து 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் செயல்பாட்டுக்கு வராததால், விரைந்து அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை சாகுபடி சுமார் 5 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறுவை சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்துடனும், அதிகளவிலும் மேற்கொள்ள தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் அமல்படுத்துவதால் விவசாயிகளுக்கு உரம், இடுபொருட்கள் போன்றவற்றை மானிய விலையில் வழங்கி, அரசு ஊக்கப்படுத்துவதால், உற்பத்திச் செலவு ஓரளவுக்கு குறைகிறது.
அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.61.90 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ.61.12 கோடியும் ஒதுக்கீடு செய்தது. இதில், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் தலா ஒரு மூட்டை யூரியா, டிஏபி, அரை மூட்டை பொட்டாஷ் ஆகியவை மானியமாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், நிகழாண்டு கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நிகழாண்டு குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் ரூ.75.95 கோடியில் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 2.75 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நாற்றங்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இறுதிக்குள் குறுவை நடவுப் பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடவு செய்த 10 முதல் 15 நாட்களுக்குள் அடியுரமாக யூரியா, டிஏபி ஆகிய உரங்களை தெளிக்க வேண்டியுள்ளது. எனவே, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை உடன் செயல்படுத்த தமிழக அரசு உடனடியாக அரசாணையை வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் காவிரி டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ஜெகதீசன் கூறியது: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து கூடுதல் மகசூலையும் எடுத்தனர். தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நடவு செய்த பின் அடியுரம் இட வேண்டும். இதற்காக வேளாண்மைத் துறையினரிடம் கேட்டால் தொகுப்பு திட்டத்துக்கு இன்னும் அரசாணை வெளியிடவில்லை என்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசு அரசாணை வெளியிட்ட ஒரு வாரத்துக்குள் விவசாயிகளுக்கு உரங்கள், இடுபொருள் மானியம் வழங்கப்படும். நாங்களும் அரசாணையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’’ என்றனர்.