ஸ்ரீநகர், சோபியான் பலாத்காரகொலை வழக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்கிய ஜம்மு — காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் இருவர் நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
கடந்த 2009ல், ஜம்மு – காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசியா, நிலோபர் என்ற இரு இளம்பெண்கள் அங்குள்ள ஆற்றங்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, மாவட்டம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டதை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இளம் பெண்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இறந்த பெண் ஒருவரின் சகோதரர் உட்பட ஆறு டாக்டர்கள், ஐந்து வழக்கறிஞர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் மீது பொய் சாட்சியத்தை உருவாக்கியதாக சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியது.
பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பொதுமக்களின் கோபத்தைத் துாண்டுவதற்காக இவர்கள் அனைவரும் சதித் திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கை தயாரித்த போது பொய்யான தகவலை சேர்த்த இரண்டு டாக்டர்களை மாநில அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது.
டாக்டர்கள் பிலால் அஹ்மத் தலால், நிகாத் ஷாஹீன் சில்லு ஆகிய இருவரும், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் கலவரத்தை துாண்டும் நோக்கில் இறந்த பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை பொய்யாக உருவாக்கியதாக கூறி பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இறந்த பெண்களின் உடல்களை உடற்கூராய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் குழுவினர், அவர்கள் நீரில் மூழ்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement