மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று முக்கியத் தலைவர்களைச் சந்தித்து நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தார். தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த நிகழ்வு இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் பாஜகவும் உற்று கவனித்து வருகிறது.
நிதீஷ் குமாரின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின்
நேற்று இரவு பாட்னா சென்றார் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் இறுதி செய்யப்படும் பெயர் – சைலேந்திரபாபு குறி வைக்கும் பதவி!
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஸ்டாலின், “நான் பாட்னா வந்தடைந்தேன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அன்பாக வரவேற்றனர். மேலும் பீகார் தமிழ் சங்கத்தினர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காட்டிய அன்புக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய நிகழ்வில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலாளர் யார்? ஸ்டாலின் எடுக்கும் முடிவு: இறையன்புவுக்கு புதிய பதவி?
டெல்லி ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் தொடா்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்தாவிட்டால் இக்கூட்டத்தில் இருந்து ஆம் ஆத்மி வெளிநடப்பு செய்யும் என்று அக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.