கோவை: முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பெண் ஆதரவாளரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி(56). இவர், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக திமுக பிரமுகர் ஹரீஷ், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், கடந்த 20-ம் தேதி அவரை போலீஸார் கைது செய்தனர்.
உமா கார்க்கியை ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணபாபு, நேற்று மாலை 5 மணி வரை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். மாலையில் நீதிமன்றத்தில் உமா கார்க்கியை ஆஜர்படுத்தி, மேலும் ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். இதை ஏற்று, இன்றும் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.