கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அவர் வழங்கிய மனுவில், “அமராவதி அணையில் 64 அடி உயரம் தண்ணீர் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக கடைமடை வரை தண்ணீரை திறக்க வேண்டும். 60 அடி தண்ணீர் இருந்தாலே திறக்கலாம் என விதி இருக்கிறது. அமராவதி ஆற்றின் துணை ஆறான குடகனாற்றில் வரும் கழிவு நீரில் 3500 டி.டி.எஸ் உப்புத் தன்மை கலந்து வருவதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவுநீரை ஆற்றில் கலக்கும் நிறுவனத்தை கண்டறிந்து, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நாங்கள் நடத்திவரும் டிரஸ்ட் சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் மூன்று முறை அதில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றினார்கள். வளர்ந்து வரும் மரங்களின் மீது சுடும் தாரை ஊற்றி மரங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றை தடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கரூர் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் இருக்கிறது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில், மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கேட்ட இடத்தில் காவல்துறை அனுமதி தருவது இல்லை. நாம் கேட்கும் இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில் நடத்தச் சொல்லி அலைக்கழிக்கிறார்கள். இதனால், ஒவ்வொரு முறையும் நாங்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றே போராட்டங்கள் நடத்த கூடிய சூழ்நிலை உள்ளது” என்றார்.