2-வது டெஸ்டில் மேலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம் – இங்கிலாந்து பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம்

பர்மிங்காம்,

பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் 281 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாளிலேயே 8 விக்கெட்டுடன் ‘டிக்ளேர்’ செய்தது விமர்சனத்திற்குள்ளானது.

தொடர்ந்து ஆடியிருந்தால் மேலும் 30-40 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறினர். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி எச்சரிக்கையுடன் மிகவும் நிதானமாக விளையாடியது. கடைசி கட்டத்தில் மட்டும் கொஞ்சம் வேகமாக மட்டையை சுழற்றி வெற்றிக்கனியையும் பறித்தது.

இந்த நிலையில் எஞ்சிய போட்டிகளிலும் தங்களது ஆக்ரோஷமான அணுகுமுறை தொடரும், அதை மாற்றப்போவதில்லை என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் எப்போதும் அணியை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். எதிரணியை நெருக்கடிக்குள்ளாக்கி அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக சில அதிரடியான முடிவுகளை மேற்கொள்கிறோம்.

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியினருக்கு அவர்களது அணுகுமுறையும், யுக்தியும் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஏனெனில் இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் எஞ்சிய போட்டிகளிலும் இதே போன்ற வியூகங்களை தொடருவார்கள் என்று நம்புகிறேன். அதனால் இந்த தொடர் இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கப்போகிறது.

நாங்கள் விளையாடிய விதத்தில் தவறில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போதைய எங்களது அதிரடியான அணுகுமுறை சரியானது என்று நிரூபித்து காட்டியிருக்கிறோம். இந்த டெஸ்டில் சற்று அதிர்ஷ்டமும் இருந்திருந்தால் முடிவு எங்களுக்கு சாதகமாக மாறியிருக்கலாம். இரு அணிகளும் வெவ்வேறு பாணியில் விளையாடினாலும் பரபரப்பான இந்த டெஸ்டை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

களத்தில் எங்களது வீரர்கள் வெளிக்காட்டிய முயற்சியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதனால் லண்டன் லார்ட்ஸ் டெஸ்டுக்கு (28-ந்தேதி தொடக்கம்) நல்ல நம்பிக்கையுடன் செல்வோம். 2-வது டெஸ்டில் இன்னும் தீவிரமாகவே விளையாடுவோம்.

விரலில் காயமடைந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி உடல்தகுதியுடன் இருந்தால் லார்ட்ஸ் டெஸ்டுக்கு தேர்வு செய்யப்படுவார். இன்னும் நாலைந்து நாட்கள் இருப்பதால் அதற்குள் காயம் குணமடைந்து விடும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு மெக்கல்லம் கூறினார்.

மெக்கல்லம்- பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணி 14 டெஸ்டுகளில் விளையாடி அதில் 11-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.