வாஷிங்டன் முதல் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன் சிறப்பான வரவேற்பு அளித்தார். ”இது, 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்துள்ள கவுரவம்,” என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, தனிப்பட்ட விருந்தில், இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், இருதரப்பு பேச்சு நடத்துவதற்காக, வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அவருக்கு, அதிபர் ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவை பூர்வீகமாக உடைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவருடைய கணவர் டக்ளஸ் எம்மாவ் இதில் கலந்து கொண்டனர்.
வெள்ளை மாளிகையில், நுாற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்வது, சிறப்பான ஜனநாயகம் என்பதை, இந்தியாவும், அமெரிக்காவும் பெருமையாக கருதுகின்றன. அனைவரின் நலனுக்காக செயல்படுவோம் என்ற கொள்கையை கொண்டுள்ளோம்.
நான், 30 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவுக்கு வந்தபோது, வெள்ளை மாளிகையை வெளியில் இருந்து பார்த்தேன். பிரதமரான பின், பலமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால், முதல் முறையாக வெள்ளை மாளிகையின் கதவுகள், இந்திய வம்சாவளியினருக்காக திறந்து விடப்பட்டுள்ளன.
இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, 140 கோடி இந்திய மக்களுக்கு கிடைத்துள்ள கவுரவமாகும்.
அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டது போல், இரு நாட்டின் அரசியல் சாசனத்தின் முகவுரையும், ‘குடிமக்களாகிய நாங்கள்’ என்ற வார்த்தையுடன் துவங்குகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, 19 குண்டுகள் முழங்க பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு தலைவர்களும் ஈடுபட்டனர்.
இதில், ராணுவம், விண்வெளி, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
மேலும் செய்தி, படங்கள் 9ம் பக்கம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்