மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் இருந்து 32 வயதுப் பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இரவு 10 மணிக்கு ரயிலில் ஏறினர், பொதுப்பெட்டியில் பயணம் செய்தனர். அப்பெட்டியில் 60 பயணிகள் வரை இருந்தனர்.
இந்நிலையில், 32 வயதுப் பெண்ணை ரயிலில் இருந்த 5 பேர் தங்களது மொபைல்போனில் போட்டோ எடுத்தனர். இதற்கு அப்பெண்ணும் அவருடன் வந்த வாலிபரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனே 5 பேரும் சேர்ந்து அப்பெண்ணுடன் வந்த வாலிபரை அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர்களுடன் தகராறு வேண்டாம் என்று கருதி அப்பெண்ணும் அந்த வாலிபரும் ரயிலின் வாசல் பக்கம் வந்து அமர்ந்தனர். அங்கேயும் 5 பேரும் சென்று அப்பெண்ணை துன்புறுத்தினர். அதோடு அவரின் சேலையை அவிழ்த்தனர்.
அப்பெண்ணை 5 பேரும் மானபங்கம் செய்து கூட்டுப் பாலியல் வன்முறை செய்ய முயன்றனர். இதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார். அவரை அரை நிர்வாணமாக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். அவருடன் வந்த வாலிபரையும் கீழே தள்ளிவிட்டனர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இச்சம்பவம் குறித்து ரயிலில் இருந்த யாரும் தட்டிக் கேட்கவில்லை. பலத்த காயத்துடன் இரண்டு பேரும் வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் நடந்தே சென்றனர். அப்பெண்ணுடன் வந்த வாலிபர் தனது கிழிந்த சட்டையை அப்பெண்ணுக்கு அணியக் கொடுத்தார்.
இருவரும் காயங்களோடு 5 கிலோ மீட்டர் காட்டிற்குள் நடந்து சென்றனர். வழியில் கனமழை பெய்தது. இறுதியில் கிராமம் ஒன்றை அடைந்தனர். அங்கேயும் சிலர் அவர்களுக்கு உதவ மறுத்தனர். இறுதியில் மூதாட்டி ஒருவர் அவர்களுக்கு உதவினார். அவர் தனது சேலை ஒன்றை அப்பெண்ணுக்கு அணியக் கொடுத்தார். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு செல்ல உதவி செய்தார். இருவரும் போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர் போலீஸார். சமீபத்தில்தான் மும்பையில் ஓடும் ரயிலில், தேர்வு எழுதச் சென்ற மாணவியை ரயில்வே போர்ட்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை பலாத்காரம் செய்தார். ரயிலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.