புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள் பாட்னாவில் நேற்று நடத்திய கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
அப்போது பாட்னா தமிழ்ச் சங்க தலைவர் என்.சரவணகுமார் ஐஏஎஸ், செயலாளர் மகாதேவன் தலைமையில் 20 தமிழர்கள் முதல்வரை சந்தித்தனர். இதில், ஐஏஎஸ் அதிகாரிகளான கே.செந்தில்குமார், தியாகராஜன், சஜ்ஜன், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் ரவீந்திரன் சங்கரன், அவரது மனைவி மலர்விழி, ஐஎப்எஸ் அதிகாரி கணேஷ்குமார் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
அனைவரையும் தனித்தனியாக விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பிஹார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் என்.சரவணகுமார் கூறும்போது, “பிஹாரின் தமிழர்கள் எண்ணிக்கை குறித்தும் அவர்களது குழந்தைகள் தமிழ் பயில்கிறார்களா என்றும்
முதல்வர் ஆர்வமுடன் கேட்டறிந்தார். தமிழ் கற்றுத்தர தமிழ் இணையக் கல்விக் கழகம் உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது” எனக் கூறினார்.
இதற்குமுன் 2015-ல் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமார் வென்று முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க திமுக பொருளாளராக இருந்த ஸ்டாலின் முதன்முறையாகப் பாட்னா வந்திருந்தார். எம்எல்ஏவாகவும் இருந்த அவரை திமுக சார்பில் அதன் தலைவர் கருணாநிதி அனுப்பி வைத்திருந்தார். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் நேரடியாகக் களம் இறங்கிய முதல் தருணமாகும். கடந்த முறையை போலவே இம்முறையும் ஒருநாள் முன்னதாக வந்திருந்த முதல்வர் ஸ்டாலினுடன் திமுக எம்.பி.யான டி.ஆர்.பாலு வந்திருந்தார்.
இவர்களை தன் வீட்டுக்கு அழைத்த லாலு, தனது இரு மகன்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் உள்ளிட்ட தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்தினார். இந்தமுறையும் லாலு வீட்டுக்கு சென்று நலம் விசாரித்து திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் கடந்த முறை மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் தங்கினார். அப்போது அங்கிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அதே ஒட்டலில் இருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அழைத்த மம்தா, அவரை ஸ்டாலினுடன் அறிமுகப்படுத்தினார். ஆனால், கடந்த 8 வருடங்களில் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். இதனால், இந்தமுறை கூட்டம் துவங்கும் முன்பாக முக்கியத் தலைவர்களை அவர் தானே சென்று சந்தித்தார். பிற தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் வந்து மரியாதை நிமித்தம் வணங்கிச் சென்றனர்.
நேற்றைய எதிர்க்கட்த் தலைவர்கள் கூட்டத்தில் 17 கட்சிகளை சேர்ந்த 27 பேர் கலந்துகொண்டனர். தலைவர்கள் அனைவரும் வட்டமாக அமர்த்தப்பட்டிருந்தனர். நிதிஷ்குமாருக்கு இடதுபுறம் லாலு, மம்தா பானர்ஜி அமர்ந்திருந்தனர். வலதுபுறமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழக முதல்வர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி., அகிலேஷ் யாதவ் அமர்ந்திருந்தனர்.