மின் கட்டண உயர்வை திரும்ப பெறும்படி சித்தராமையாவிடம் தொழில்அதிபர்கள் கோரிக்கை

பெங்களூரு:

மின் கட்டண உயர்வை திரும்ப பெறும்படி முதல்-மந்திரி சித்தராமையாவிடம், தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கும், மின் கட்டண உயர்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

அரசுக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கர்நாடக வர்த்தம் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது, அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்து கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளை சேர்ந்த தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்துவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து இருந்தார். அதன்படி, பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவை, கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் தலைவர் பி.வி.கோபால ரெட்டி தலைமையிலான தொழில் அதிபர்கள் சந்தித்து பேசினார்கள்.

தொழில் அதிபர்கள் கோரிக்கை

அப்போது மின் கட்டண உயர்வு காரணமாக தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், பொருட்களை உற்பத்தி செய்யும் விலை அதிகரிப்பதாகவும், எனவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் முதல்-மந்திரியிடம் தொழில் அதிபர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே மின் கட்டண உயர்வுக்கு கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது என்று சித்தராமையா கூறினார்.

அப்போது மின் கட்டண வரி 9 சதவீதமாக இருப்பதாகவும், அதனை 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் தொழில்அதிபர்கள் கூறினார்கள். உடனே அவர்களிடம் பேசிய சித்தராமையா, ‘உங்களது கோரிக்கையை பரிசீலிக்கிறேன். மின் கட்டண உயர்வை திரும்ப பெறுவது அல்லது மாற்றம் செய்வது குறித்தும், வரியை குறைப்பது பற்றியும், அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு பற்றியும் நிதித்துறை அதிகாரிகள், மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி, தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுப்பேன்’ என்று கூறி உறுதி அளித்தார்.

சம்பந்தம் இல்லை

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மேலும் பேசுகையில், ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தோம். அதன்படி, அந்த திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதால் தான் மின் கட்டணத்தை காங்கிரஸ் அரசு உயர்த்தி இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கும், மின் கட்டண உயர்வுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை’, என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், முதல்-மந்திரியின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.