திருப்பூர் மாநகராட்சியின் மையப் பகுதியான ராயபுரத்தில் காதர்பேட்டை பஜார் இயங்கி வருகிறது. பனியன் துணிகளுக்கென பெயர் பெற்ற சந்தையில் 50 கடைகள் உள்ளன. இந்தச் சந்தையிலிருந்து வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் இங்கிருந்து வியாபாரிகள் துணிகளை கொள்முதல் செய்து வழக்கம். காதர்பேட்டை பஜாரில் வெள்ளிக்கிழமை இரவு கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. இரவு 9 மணி அளவில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென பஜாரிலுள்ள அனைத்துக் கடைகளுக்கும் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள், தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால், கடைகளில் யாரும் இல்லாததால்உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் 50 கடைகளிலும் இருந்த பல கோடி மதிப்பிலான பனியன் துணிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகின. 3 வீடுகள் 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்தில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் , மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து ஆட்சியர் கிறிஸ்துராஜ், “காதர்பேட்டை பஜாரில் உள்ள 50 கடைகளும் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. சேதம் மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசிடம் ஆலோசிக்கப்படும். கடைகள் பூட்டப்பட்டு சென்றதால் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். தீ விபத்தால் அருகில் இருந்த கட்டடங்களுக்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.