கடந்த ஆண்டு பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா பஞ்சாப்பிலுள்ள அவரது சொந்த ஊரில் பட்டப்பகலில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்பவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்ய ஆட்களையும், ஆயுதங்களையும், பணத்தையும் ஏற்பாடு செய்த கோல்டி பிரர் கனடாவில் பதுங்கியிருக்கிறான். கோல்டி பிரரும், லாரன்ஸும் சேர்ந்து நடிகர் சல்மான் கானைக் கொலை செய்ய முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். இதற்காக பல முறை சல்மான் கானுக்கு இருவரும் கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது கோல்டி பிரர் மீண்டும், `சல்மான் கானை நிச்சயம் கொலைசெய்வோம்’ என்று மிரட்டியிருக்கிறான்.
இது தொடர்பாக தனியார் டி.வி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “நாங்கள் அவரை (சல்மான் கான்) கொலைசெய்வோம். நிச்சயம் அவரைக் கொலைசெய்வோம். `மன்னிக்க முடியாது’ என்று பாய் சாஹே (லாரன்ஸ்) சொல்லிவிட்டார். மனம் மாறி பாபா கருணை காட்டினால்தான் உண்டு. சல்மான் கானைக் கொலைசெய்வதுதான் தனது வாழ்நாள் குறிக்கோள் என்று லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல் சல்மான் கான் மட்டுமல்லாது, நாங்கள் உயிரோடு இருக்கும்வரை எங்களது எதிரிகளை கொலைசெய்ய முயற்சி செய்து கொண்டே இருப்போம். சல்மான் கான் எங்களது இலக்கு. இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம். நாங்கள் வெற்றி பெறும்போது உங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்திருக்கிறான்.
`சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்தது ஏன்?’ எனப் பேசிய கோல்டி பிரர், “சித்து மூஸ்வாலா மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துவிட்டார். அதனால்தான் அவருக்குப் பாடம் கற்பித்தோம். இதை மறைக்க சட்டவிரோதமாகச் செய்வதாக நாங்கள் நினைக்கவில்லை.
இதற்காக தேவைப்பட்டால் எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக இருந்தோம். அதனால் அதை செய்யவேண்டியதாக இருந்தது. இதில் நான் மட்டும் ஈடுபடவில்லை. என்னால் தனியாக எதையும் செய்ய முடியாது. சித்து மூஸ்வாலா தனது அரசியல் மற்றும் பணபலத்தை தவறாகப் பயன்படுத்தினார். எனவேதான் அவருக்குப் பாடம் கற்பிக்கவேண்டியிருந்தது. பாடம் கற்பித்தோம். எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். எனவேதான் அவரை தண்டித்தோம்” என்று குறிப்பிட்டிருக்கிறான்.
சல்மான் கான் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்காகச் சென்றபோது அபூர்வ வகை மான்களை வேட்டையாடினார். அந்த மான்களை பிஷ்னோய் இன மக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். எனவே, `சல்மான் கானைக் கொலைசெய்வோம்’ என லாரன்ஸ் மிரட்டல் விடுத்திருந்தான். இதற்காக கடந்த மார்ச் மாதம் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான பிரசாந்த் என்பவருக்கு இமெயில் மூலம் சல்மான் கானுக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சல்மான் கான் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. சல்மான் கானின் தந்தை சலீம் கான் மும்பை பாந்த்ராவிலுள்ள பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்குச் சென்றபோது வழக்கமாக அவர் அமரும் இருக்கையில் மிரட்டல் கடிதம் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மும்பை போலீஸார் டெல்லிக்குச் சென்று லாரன்ஸிடம் விசாரணை நடத்திவிட்டு வந்திருக்கின்றனர். விசாரணையில் சல்மான் கான் பன்வெலிலுள்ள பண்ணை வீட்டுக்குச் செல்லும்போது லாரன்ஸ் ஆட்கள் அவரைக் கொலைசெய்ய முயன்றது தெரியவந்திருக்கிறது.