பிரபல யூடியூபர் சாலை விபத்தில் பலி..சோகத்தில் ரசிகர்கள்!

சத்தீஸ்கர்: பிரபல யூடியூபர் வீடியோ ஒன்றை படமாக்க சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தேவ்ராஜ் படேல்: பிரபல யூடியூபரான தேவ்ராஜ் படேல் சில ஆண்டுகளுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தில் சே படா லக்தா ஹை என்ற வசனத்தை பேசி இருந்தார். இவர் பேசிய இந்த வசனம் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி தேவ்ராஜை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது.

ஏராளமான ரசிகர்கள்: இந்த வீடியோ மூலம் தேவராஜ் படேல், யூடியூப்பில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான பாலோவர்களையும் வைத்து இருக்கிறார். யூடியூபராக இருந்த தேவராஜ், திண்டோரா வெப் சீரிஸில் நடித்தும் உள்ளார்.

விபத்தில் சிக்கினார்: இந்நிலையில், இன்று வீடியோ ஒன்றை எடுக்க ராய்பூருக்கு சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த தேவராஜ் படேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

முதல்வர் இரங்கல்: தேவ்ராஜ் படேல் மறைவுக்கு சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோடிக்கணக்கான மக்கள் மனதில் தனக்கென தனி இடம்பிடித்து, நம்மை சிரிக்க வைத்த தேவ்ராஜ் படேல் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார். இளம் வயதில் ஒரு அற்புதமான திறமைசாலியை இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார். மேலும், தேவ்ராஜ் பட்டேல் மறைவுக்கு அவரது ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.