மதுரை: தமிழகத்தில் 1993-லிருந்து 225 பேர் மலக்குழியால் உயிரிழந்துள்ளனர். மலக்குழி மரணத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார்.
மதுரை ரயில் நிலையத்தில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் ரயில்வே மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்தது. தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கோட்ட மேலாளர் பத்மநாதன் அனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ஆணையத் தலைவர் தூய்மை பணியாளர்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். ஒப்பந்தப்படி சம்பளம் வழங்குவதில்லை, உரிய பாதுகாப்பு உபகரணங்கள், சீருடைகளும் வழங்கப்படுவதில்லை. கேள்வி கேட்டதால் வேலையில் இருந்து நீக்கி விடுகின்றனர் என, பல்வேறு புகார்களை தூய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவரிடம் தெரிவித்தனர்.
மேலும், கூட்டத்தில் ஆணையத் தலைவரிடம் பேசிய, தூய்மை பணியாளர் ஒருவர் தங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை மாதம் ஒருமுறை மட்டுமே வழங்குவதால், ரயிலிலுள்ள கழிப்பறைகளில் கைகளால் மலத்தை அள்ளும் நிலை உள்ளது என, வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினர். இது பற்றி விசாரிக்க ஆணையத்தலைவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை ரயில்வேயில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் ரூ.600 கூலிக்கு ரூ.365 கிடைப்பது தெரிகிறது. ஊதியம் தராத ஒப்பந்த நிறுவனத்துக்கான அனுமதியை ரத்து செய்ய கோட்ட மேலாளரிடம் கூறியுள்ளேன். பணியாளர்களுக்கு பிஎஃப் எண் அளிக்கவில்லை.பலருக்கு போனஸ் அளிக்கவில்லை. ஆனால், போனஸ் வாங்கியது போன்று சில பணியாளர்களிடம் ஒப்பந்த நிறுவனங்கள் கையெழுத்து கேட்டுள்ளது.
ஊதியம் குறைவு பிரதான பிரச்சினையாக உள்ளது. பெண் தூய்மை பணியாளர்கள் , பட்டியலின தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே அலுவலகங்களில் தொலைபேசி எண், அதிகாரிகள் பெயரை அச்சிட அறிவுறுத்தியுள்ளேன். பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுக்காத நிறுவனங்கள் மீண்டும் ஒதுக்கீடு தொகையை ரயில்வேயிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கையால் மலம் அள்ள பணியாளர்களை ஈடுபடுத்திய ஒப்பந்த நிறுவனங்களை தடை செய்வதோடு, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 1993-லிருந்து 225 பேர் மலக்குழியால் உயிரிழந்துள்ளனர். மலக்குழி மரணத் தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலக்குழியில் இறங்க மாட் டேன் என தூய்மைப் பணியாளர்கள் உறுதியோடு இருக்க வேண்டும். இத்தொழிலில் பட்டியலினத்தவர்களே அதிகம் என்பதால் மாநிலளவில் ஆணையம் தேவை என, ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.