தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளையபெருமாளின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அப்போது அவரது திருவுருவப் படத்துக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, கர்நாடக மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தமிழக காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பீட்டர் அல்போன்ஸ், “பல நேரங்களில் காங்கிரஸ் தலைவர்களுக்கு கட்சியின்மீது மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. அனைத்து தலைவர்களின் வாழ்க்கையும் எடுத்துக்கொண்டால், அதில் ஒரு சிறிய நேரத்தில் ஊடல், மோதல், போதல், பிறகு வருதல், மீண்டும் சேருதல் ஆகியவைதான் நடந்திருக்கின்றன. வெளியில்போன அனைவரும் வந்துவிட்டார்கள். அப்படி சென்றவர்களில் தம்பி வாசன் தான் வரவில்லை” என்றார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சிலர், “வாசன் வேண்டாம்…” எனக் கூச்சலிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மேடையிலிருந்து மூத்த தலைவர்கள் கையை அசைத்து அமைதியாக இருக்கும்படி கூறினர். பின்னர் அவர்கள் அமைதியாகினர். தொடர்ந்து பேசிய பீட்டர் அல்போன்ஸ், “காமராஜர், மூப்பனார், வாழப்பாடியார், ப.சிதம்பரம், குமரி அனந்தன் ஆகியோருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதேபோல் அகில இந்திய தலைவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் இவர்கள் அனைவரும் மீண்டும் காங்கிரஸுக்கு வந்துவிட்டார்கள். இளையபெருமாளின் அடுத்த பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும்போது இந்தியாவின் சரித்திரம் எழுதப்பட்டிருக்கும்” என்றார்.
தொடர்ந்து சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது, “நாட்டில் அடிப்படை வாழ்வியலுக்கான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்துக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியமானதாக நான் பார்க்கிறேன். அதனடிப்படையில் நாங்கள் நாடாளுமன்றத் தேரலுக்கான பணிகளைத் தொடங்கி விவாதித்து வருகிறோம். மக்களின் அன்றாட வாழ்வியலுக்கே சவால்கள் வந்திருக்கின்றன. இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கியிருக்கிறது. தலைமை மாற்றம் தொடர்பாக கட்சியின் மேலிடம்தான் முடிவெடுக்கும். அது தொடர்பாக நாங்கள் சிந்திப்பதில்லை.
யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படுகிறதோ அதை ஏற்று ஒருங்கிணைந்து செயல்படுவோம். எனக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. பொறுப்புகளை கடந்து காங்கிரஸ் பணியாளராக என்னை ஏற்றுக்கொண்டிருப்பதே மகிழ்ச்சி. பொறுப்பிருந்தால்தான் பணியாற்ற முடியும் என்பது கிடையாது. இப்போது உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை பல்வேறு வெற்றிகளை எடுத்துக் கொடுத்திருக்கிறது. கட்சி உயிர்ப்புடன் இருக்க கே.எஸ்.அழகிரியின் பங்கு முக்கியமாக இருக்கிறது. அவர் கட்சிக்குள் சமத்துவத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அடுத்து வரக்கூடியவர்களுக்கும் அதை பின்தொடர்வார்கள்” என்றார்.
பின்னர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேர்வதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சித் தலைமைதான் இது தொடர்பாக முடிவுசெய்யும். ஜெயக்குமாருக்கு இது தொடர்பான வருத்தம் வேண்டாம். அவர்கள் கூட்டணி கட்சியில் இருக்கக்கூடியவர்களை விட்டுவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பா.ஜ.க-வுடன் இருக்கக்கூடிய முரண்பாடுகளை அவர்கள் முதலில் கலைந்து ஒற்றுமையாக இருக்கட்டும். தி.மு.க தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். தமிழக காங்கிரஸ் கமிட்டி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. ராகுல் காந்தியின் வருகைக்காக எதிர்நோக்கி இருக்கிறோம். மிக விரைவில் தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி வரவிருக்கிறார்.
அவருடைய வரவுதான் தமிழ்நாட்டின் அரசியலை திருப்பிப்போடும். 40 இடங்களிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. சித்தாந்த அடிப்படையில் இந்த தேசத்தை பா.ஜ.க-விடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. எந்த முரண்பாடுகள் இருந்தாலும் ராகுல் காந்தி கூறியதைப்போல் பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்றார்.