வீடு கட்டுவதற்கு கட்டட வரைபட அனுமதி வழங்க 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சிமன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைதுசெய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் பொன்பாப்பா பாண்டி. இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கட்டட வரைபட அனுமதிபெற ஊராட்சிமன்ற அலுவலகத்தை நாடினார். அப்போது கட்டட வரைபட அனுமதிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் காளிமுத்து ரூ.6,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்பாப்பா பாண்டி, இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய பணத்துடன் இன்று காலை கீழராஜகுலராமன் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பொன்பாப்பா பாண்டி சென்றார். அங்கு ஊராட்சிமன்றத் தலைவர் காளிமுத்துவைச் சந்தித்த அவர், வரைபட அனுமதிக்காக ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தைக் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், வரைபட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சிமன்றத் தலைவர் காளிமுத்துவைக் கையும், களவுமாகக் கைதுசெய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.