சென்னை பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் தமிழில் படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதே நேரத்தில் இவர் மீது அதிவேகத்தில் பைக்கை ஒட்டி இளைஞர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதாகவும் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவதாகவும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது.
அடுத்தடுத்த வழக்கு: இவர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாலும், வாகனம் ஓட்டும்போது மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காகவும் இவர் மீது போலீசார் பலமுறை வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தாலும், பல வழக்குகள் இருந்தாலும் தொடர்ந்து இவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சூப்பர் பைக்: டிடிஎஃப் வாசன் அண்மையில் ஹயாபுஸா சூப்பர் பைக்கை வாங்கி இருந்தார். அந்த பைக்கை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு பைக் ட்ரிப் சென்ற போது, அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் பைக்கில் பயணித்ததாகவும், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டியதால் அவருக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஹீரோவாகினார் வாசன்: பைக் ரைடு மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வரும் 29ம் தேதி, டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால், இவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எங்கே போய் முடியப்போகுதோ: ஏற்கனவே 2கே கிட்ஸ்களுக்கு விதவிதமான விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி அதில் நட்ட நடுரோட்டில் சிட்டா பறக்க வேண்டும் என்ற ஆசை மனதில் விதைத்த வாசன், தற்போது வேகமாக போனால் ஹீரோவாகலாம் என்ற ஆசையை மனதில் விதைத்து இருக்கிறார். இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதே தெரியவில்லை.