குடிக்கு கொடி பிடித்த ‛நா ரெடி' பாடல் : வரிகளை நீக்க விஜய் ரெடி?

'லியோ' படத்தில் வரும் 'நான் ரெடி' பாடல் வரிகளில், போதை பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால், அப்பாடல் வரிகளை நீக்கி விட்டு, வேறு காட்சியில் நடிக்க விஜய் ரெடி என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்., 19ல் நடிகர் விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' படம் வெளிவரவுள்ளது. விஜய் பிறந்த நாளை ஒட்டி, கடந்த 22ம் தேதி, பிறந்த நாள் பரிசாக, அவர் பாடிய 'நான் ரெடி' பாடலின் முக்கிய காட்சி வெளியிடப்பட்டது. அப்பாடலில் வரும் சில வரிகளில் சாராயம், பீடி, சுருட்டு, புகையிலைன்னு போதைப் பொருள் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில வரிகள் வன்முறையை பேசுகிறது.

இதையடுத்து, போதை பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதாக, கொருக்குபேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர், 'ஆன்லைன்' வாயிலாக, சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அம்மனுவில், 'போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பாடல் இருப்பதால் தடை செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், பள்ளி இறுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, விஜய் பேசுகையில், 'குணாதியங்களுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணத்தை இழந்தால் நீங்கள் எதையும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ இழந்திருக்கிறீர்கள். குணத்தை இழந்து விட்டால் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்' என்றார்.

மேடையில் மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கிய விஜய், சினிமாவில் போதைப் பொருள் பெயரை பயன்படுத்தியிருப்பதால், அவர் மீது எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகையில், 'சினிமாவில் நல்ல கருத்துக்களை தெரிவிக்கும்போது, சில தீயபழக்கத்தையும் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. நல்ல விஷயங்களை மட்டும் மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற வகையில், சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்குவதற்கு இசைக் குழுவினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்' என்றார்.

– நமது நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.