கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையில் 1990-ம் ஆண்டில் பாப்பச்சன், அவரின் மனைவி மரியம்மா ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் அப்போது, 18 வயது ஆன ரெஜி என்ற அச்சம்மா வேலை செய்து வந்தார். ரெஜியை சொந்த மகளைப் போல பாவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மரியம்மா 1990-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தனது வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் கத்தியால் 9 இடங்களில் குத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த அவரின் கழுத்தில் இருந்த கிடந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி, காதில் கிடந்த கம்மல் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
ஒரு காதை கத்தியால் அறுத்து அதில் இருந்த கம்மல் எடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வீட்டில் வேலை செய்துவந்த 18 வயதான ரெஜி என்ற அச்சம்மா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், சொந்த மகளைப்போல வளர்த்த அவர் மரியம்மாவை கொலைச் செய்திருக்க வாய்ப்பு இல்லை என ஊர் மக்கள் கூதிவந்தனர். இந்த நிலையில், தீவிர விசாரணைக்குப் பின்னர் கொலை வழக்கில் ரெஜி கைது செய்யப்பட்டார். 1993-ல் மாவேலிக்கரை கோர்ட் இந்த வழக்கில் இருந்து ரெஜி என்ற அச்சம்மாவை விடுவித்தது.
இதையடுத்து அரசு வக்கீல் கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கில் 1996 செப்டம்பர் 11-ல் கேரள ஐகோர்ட் ரெஜி குற்றவாளி என கூறியதுடன், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் தலைமறைவானார். அவரை போலீஸார் தனிப்படை அமைத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் எர்ணாகுளம் பல்லாரிமங்கலம் பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வந்த ரெஜி செய்யப்பட்டுள்ளார். 27 ஆண்டுகளுக்கு பிறகு ரெஜி தனது 51 வயதில் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார். அவர் கணவரின் பெயரையும் சேர்த்து மினி ராஜூ என தனது பெயரை மாற்றி வாழ்ந்துவந்ததும் தெரியவந்துள்ளது. அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
ரெஜி கைது செய்யப்பட்டது குறித்து போலீஸார் கூறுகையில், “குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் தலைமறைவான ரெஜி கோட்டயம் பகுதியில் மினி என்ற பெயரில் சில ஆண்டுகள் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அப்போது தமிழ்நாட்டின் தக்கலையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை 1999-ல் திருமணம் செய்துவிட்டு சிலகாலம் தக்கலையிலும் வசித்து வந்துள்ளார். ரெஜி தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்தது சமீபத்தில் தெரியவந்தது. அந்த தகவலை துருப்புச்சீட்டாக வைத்து விசாரணை நடத்தியதில் அவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம் பகுதியில் மினி ராஜூ என்ற பெயரில் துணிக்கடையில் வேலை செய்துவந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்தே ரெஜி என்ற அச்சம்மாள் கைது செய்யப்பட்டார்” என்றனர்.
கைது செய்யப்பட்ட ரெஜி மாவேலிக்கரை கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்படுள்ளார். இளம் பெண்ணாக இருக்கும்போது கோர்ட்டால் கொலை குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ரெஜி இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் 27 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.