புதுடெல்லி: சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இருந்து போதைப் பொருள் புழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழுவதுமாக ஒழிக்கும். அத்துடன், இந்தியாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தும்.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற இலக்கு சாத்தியமாகும். அந்த நிலையை எட்டும் வரை நாங்கள் ஓயமாட்டோம். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உட்பட பல்வேறு முக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு வருகின்றன. எனினும், மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே, ஒவ்வொரு குடிமக்களும், போதைப் பொருள் புழக்கம் குறித்து அறிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உதவ முன்வர வேண்டும்.
அத்துடன், போதைப் பொருள் விஷயத்தில் மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். அது சமூகத்தை சீரழிக்கிறது. அதனால் வரும் பணம் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. அதையும் நாம் தடுத்தாக வேண்டும். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.