அஜித்துக்கு கார் ரேஸ், ஷாலினி அஜித்துக்கு பேட்மின்டன் போல, ஷாலினியின் தங்கை ஷாம்லிக்கு ஓவியங்கள் மீதான பிரியம் அதிகம். தான் வரைந்த ஓவியங்களை எல்லாம் தொகுத்து சென்னையில் கண்காட்சியாக வைத்துள்ளார். அதை திரை பிரபலங்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
ஷாலினி அஜித்குமாரின் தங்கை ஷாம்லி, விஜயகாந்த் நடித்த ‘ராஜநடை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘அஞ்சலி’ படம் மூலம் புகழ் பெற்றார். தமிழில் கதாநாயகியாகக் கடைசியாக நடித்த படம் ‘வீர சிவாஜி’. இதுவரை 65 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஷாம்லி, இப்போது ஓவியராகவும் பன்முகம் காட்டுகிறார். தான் வரைந்த ஓவியங்களை எல்லாம் ‘SHE’ என்ற தலைப்பில் கண்காட்சியாக வைத்துள்ளார். இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தோட்டாதரணி, ஷாலினி அஜித், அனோஷ்கா, ஆத்விக் எனப் பலரும் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர்.
துபாய் உட்படப் பல வெளிநாடுகளில் இப்படி ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கிறார் ஷாம்லி. சிங்கப்பூரில் உள்ள லசால் கலைக் கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸில் டிப்ளமோ பட்டம் பெற்ற ஷாம்லி, ஃபிலிம் மேக்கிங் கோர்ஸும் முடித்துள்ளார். பாரீஸ் கலைக் கல்லூரியில் ஆக்கப்பூர்வமான பயிற்சியையும், சிங்கப்பூரில் சீன இங்க் (Chinese ink), புளோரன்ஸ் அகாடமியா ரியாசியில் கண்ணாடி ஓவியம் வரைவதில் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறார். இப்படிப் பல்வேறு திறமைகளைக் கொண்ட ஷாம்லியின் ஓவியங்களைப் பார்வையிட்ட திரையுலகினர் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.
ஷாம்லி ஓவியரானதற்குக் காரணம், அஜித்தின் மகள் அனோஷ்காதானாம். “ஓவியர் ஏ.வி.இளங்கோ சார் பெயிண்டிங்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தொன்மத்தையும் நவீனத்தையும் ஒருசேர அவர் ஓவியங்கள் பிரதிபலிக்கும். இளங்கோ சார்கிட்ட அனோஷ்கா ஓவியம் கத்துக்கிட்டிருந்தாங்க. அவங்களை டிராயிங் க்ளாஸுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்ததுலதான் எனக்கும் ஓவியங்கள் மீதான ஈடுபாடு அதிகரிச்சது. ஓவியம் வரைவது மட்டுமில்ல… அதைப் புரிஞ்சுக்கறதும் ஒரு கலைதான்” என்கிறார் ஷாம்லி.