உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: அமெரிக்காவை சிதறடித்தது ஜிம்பாப்வே

ஹராரே,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஹராரேவில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின் ஓய்வு எடுத்ததால், சீன் வில்லியம்ஸ் அந்த அணியை வழிநடத்தினார்.

‘டாஸ்’ ஜெயித்த அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களம் புகுந்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் இன்னோசென்ட் கையா 32 ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு ஜாய்லார்ட் கும்பியும், கேப்டன் சீன் வில்லியம்சும் கைகோர்த்து கத்துக்குட்டி அணியான அமெரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய சீன் வில்லியம்ஸ் 65 பந்துகளில் தனது 7-வது சதத்தை எட்டினார். அதே ஓவரில் கும்பி 78 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த சிகந்தர் ராசா 48 ரன்களும் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரையான் பர்ல் 47 ரன்களும் (16 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

மறுமுனையில் வில்லியம்ஸ் இரட்டை சதத்தை நோக்கி முன்னேறினார். 3 ஓவர் மீதமிருந்த போது அவரது இரட்டை சதத்திற்கு 26 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வில்லியம்ஸ் 174 ரன்களில் (101 பந்து, 21 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார். ஒரு நாள் போட்டியில் அவரது சிறந்த ஸ்கோர் இது தான். அத்துடன் ஜிம்பாப்வே வீரர் ஒருவரின் 3-வது அதிகபட்சமாகவும் இது அமைந்தது. கடைசி ஓவரில் ததிவனாஷி மருமணி (18 ரன்) ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் ஸ்கோரை 400-ஐ தாண்ட வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஜிம்பாப்வே 6 விக்கெட்டுக்கு 408 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கடைசி 13 ஓவர்களில் மட்டும் 169 ரன்கள் திரட்டினர். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக 7 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்சமாக இருந்தது.

மோசமான பந்து வீச்சு மட்டுமின்றி பல கேட்ச் மற்றும் ரன்-அவுட் வாய்ப்புகளை அமெரிக்க வீரர்கள் கோட்டை விட்டதும் ஜிம்பாப்வேயின் ரன்வேட்டைக்கு ஒரு காரணமாகும். அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய அமெரிக்கா 25.1 ஓவர்களில் 104 ரன்களில் சுருண்டது. ரிச்சர்ட் நரவா, சிகந்தர் ராசா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் ஜிம்பாப்வே 304 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. 52 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் 2-வது பெரிய வெற்றி இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வென்றதே இந்த வகையில் சாதனையாக நீடிக்கிறது.

4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே ஏற்கனவே சூப்பர்சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறி விட்டது. 4-வது தோல்வியுடன் அமெரிக்கா பரிதாபமாக வெளியேறியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.