நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய மழையாக தென்மேற்கு பருவமழை உள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 8 ஆடம தேதிதான் தொடங்கியது. பருவமழை தொடங்கி 20 நாட்கள் நெருங்கும் நிலையில் தற்போதுதான் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
இதனிடையே வடமாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வந்தது. இந்த நேரத்தில்தான் அரபிக் கடலில் பிபர்ஜாய் புயல் உருவானது. இந்த புயல் குஜராத்தில் கரையை கடந்ததால் பருவமழை தொடங்குவதற்கு முன்பே குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் பருவமழை தொடங்கியது. இந்த பருவ மழை டெல்லியில் முன்கூட்டியே தொடங்கியிருந்தாலும், மும்பைக்கு இரண்டு வாரங்கள் தாமதமான ஒன்று. பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மும்பை, டெல்லி உட்பட வட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளாவிலும் பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் மழை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கேரளாவில் இன்று பலத்த மழை அடித்து நொறுக்கும் என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் கேரளாவிற்கு இந்த நாள் ஒரு பெரிய நாள் மற்றும் பருவமழை தொடங்கிய முதல் பெரிய மழை நாள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வால்பாறையில் இதுவரை கடும் பாதிப்புகள் நிலவி வந்த நிலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழ் நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரியிலும் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ் நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வரலாறு காணாத மழை பெய்த நிலையில் சென்னையில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தமிழ் நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.