இறுதியாகும் 'ரூ.1000 உரிமைத் தொகை' வழிகாட்டு நெறிமுறைகள் – எப்படி செயல்படுத்தப்போகிறது திமுக அரசு?!

கடந்த 2021-ம் ஆண்டு திமுக தேர்தலில் வெற்றி பெற்ற உடனே மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமாக இருந்தது குடும்ப தலைவிகளுக்கு வழங்கும், `மகளிர் உரிமைத்தொகை திட்டம்’தான். அதன் அறிவிப்பு கடந்த சட்டசபை கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் வெளியிடப்பட்டது. வரும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தாநாளன்று தொடங்கப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. அதற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

தலைமைச் செயலகம் -உரிமைத் தொகை

இந்த ரூ.7,000 கோடி நிதியிலிருந்து மீண்டும் சர்ச்சை தொடங்கியது. திட்டம் தொடங்கும் செப்டம்பர் முதல் அடுத்த நிதி ஆண்டு மார்ச் வரையில் மொத்தம் இருப்பது 7 மாதங்கள். ஒரு மாதத்திற்கு ரூ.1,000 கோடி என ஒதுக்கினால் மாதத்துக்கு 1 கோடி பெண்கள் மட்டும் அதைப் பெறமுடியும் என்னும் விமர்சனம் தலைதூக்கியது.  இந்தநிலையில், சட்டசபையில் முதலமைச்சரே சில விளக்கங்கள் அளித்தார்.

ஆலோசனைக் கூட்டம் (கோப்புப் படம்)

ஆலோசனைக்  கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

இந்தநிலையில், நேற்று(26.6.2023) யாருக்கெல்லாம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது குறித்து, தலைமைச் செயலகத்தில் இறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியானது.  இதற்கான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்றது. இதில், சிறப்பு செயலாக்கத் திட்டத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனாளர்களாக இணையலாம் என்னும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இந்த மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தகுதிவாய்ந்த பயனாளர்கள் என்னும் பெயரின் கீழ், அரசு வேலையில் இல்லாதவர்கள், 2.5 லட்சத்துக்கு மிகாமல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், பென்ஷன் வாங்காதவர்கள், வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் சென்றடையும் என நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைக்கின்றன. மேலும், இந்தத் திட்டத்தை சிறப்பு செயலாக்கத் திட்டத்துறையின் மேற்பார்வையில் சமூகநலத் துறை இதை நடைமுறைப்படுத்தும் எனத் தெரிகிறது. மேலும், அரசின் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக இந்தத் தொகை பயனாளர்களுக்கு வழங்குவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட ’வழிகாட்டு நெறிமுறை’ அறிக்கை வரும் மாதத்துக்குள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.  

உரிமைத் தொகை

இந்தத் திட்டம் முக்கியம்! ஏன்?

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், திருச்சி மாநாட்டில் இதைத் தொலைநோக்குத் திட்டமாக அறிவித்தார். இது முதலமைச்சரின் கனவுத் திட்டமாகக் கருதப்படுவதால், நிதி நெருக்கடி நிலையிலும் செயல்படுத்த திமுக அரசு முயற்சி செய்கிறது. கூடுதலாக, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், அதற்கு முன்னதாக திட்டத்தை அறிமுகம் செய்ய விரும்புகிரார்கள். அதேவேளையில், இதைக் கட்சிப் பாகுபாடு இல்லாமல், தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். இதன் அடிப்படையில் ஆய்வு செய்து நெறிமுறைகளைத் தற்போது வகுத்து இறுதி செய்துள்ளனர் என்கிறார்கள். இது ஒரு தொலைநோக்கு திட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி வரும் நாள்களில் பயனாளர்கள் எண்ணிக்கைக் கூடுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தைத் திமுக எப்படி செயல்படுத்தப்போகிறது என்னும் அடிப்படையில் இந்த உரிமைத் தொகை திமுக-வுக்கு தேர்தலில் வாக்கு வங்கியாக மாறுமா? அல்லது விமர்சன பொருளாக மாறுமா என சொல்ல முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.