மக்களின் குடியிருப்புக்களும் விவசாயம், நீர்வேளாண்மை மற்றும் மேய்ச்சல் தரைக்கு பொருத்தமான இடங்கள் விடுவிப்பு

வனவளப் பாதூகாப்பு  திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக வர்த்தமானி ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் குடியிருப்புக்களும் விவசாயம், நீர்வேளாண்மை மற்றும் மேய்ச்சல் தரைக்கு  பொருத்தமான இடங்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது.

அதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, 1985 ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த இரண்டு திணைக்களங்களினாலும் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்காக துறைசார் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபிற்கு நேற்று (26) அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதனடிப்படையில், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 1985 ஆண்டு வரையில், குறித்த இரண்டு திணைக்களங்களினாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருத்த  காணிகளை வரையறை செய்யும் செயற்பாடுகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், எஞ்சிய காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கு மற்றும் அண்டிய பிரதேசங்களில் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், காடுகளாக மாறிய பிரதேசங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த இரண்டு திணைக்களங்களினாலும்  பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசங்கள் விடுவிக்கப்படும் பட்சத்தில் விவசாயம்,  நீர்வேளாண்மை, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை போன்றவற்றின் மூலம் உற்பத்திகளை மேற்கொண்டு சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.