அமைதியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால் மணிப்பூர் முதல்-மந்திரியை நீக்க வேண்டும்: பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை

புதுடெல்லி,

கடந்த மாதம் 3-ந் தேதி மணிப்பூரில் ‘மெய்தி’ பெரும்பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இன்னும் கலவரம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஒருவழியாக, மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 55 நாட்களாக, மணிப்பூர் பற்றி மோடி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவர் பேசுவதை கேட்க ஒவ்வொரு இந்தியனும் காத்துக்கொண்டிருக்கிறான்.

மணிப்பூர் மீது பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், முதல் வேலையாக, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங்கை அவர் நீக்க வேண்டும். மணிப்பூர் கலவர பிரச்சினையில், பா.ஜனதாவின் எத்தகைய பிரசாரமும் அதன் தோல்வியை மூடி மறைக்க முடியாது.

பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து திருடப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவான அரசியல் வழிமுறை காண வேண்டும்.

பாதுகாப்பு படையினரின் உதவியுடன் சாலை அடைப்பை நீக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை திறந்து, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். மறுவாழ்வுக்கான புதிய திட்டம் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மணிப்பூரில் 12 பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்தனர். தமன்லாங், இம்பால் கிழக்கு, பிஷ்னுபூர், கங்க்போக்பி, காக்சிங், சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது அவை அழிக்கப்பட்டன.

இந்த வேட்டையில், 51 எம்எம், 84 எம்எம் ரக பீரங்கி குண்டுகள் ஒரு நெல் வயலில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வெடிகுண்டும் சிக்கியது. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்.

இதுவரை 1,100 ஆயுதங்கள், 13 ஆயிரத்து 702 வெடிபொருட்கள், 250 வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியதாக 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.