மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட அந்நாட்டின் தனியார் ராணுவ படையான வாக்னர், தன்னுடைய கனரக இராணுவ உபகரணங்களை ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்க இருப்பதாக கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா ‘நேட்டோ’ அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது.
இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.
இந்த போரில் தற்போது வரை சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15,779 பேர் படுகாயமடைந்துள்ளனர். போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது. எனவே இதனை சமாளிக்க ரஷ்யா தன்னுடைய தனியார் ராணுவ அமைப்பான வாக்னரை பயன்படுத்தியது.
பொதுவாக ரஷ்யாவில் தனியார் ராணுவ அமைப்புக்கு எவ்வித சட்ட ரீதியான அனுமதியும் கிடையாது. இருப்பினும் வாக்னர் ரஷ்யாவின் நலனுக்காக செயல்படுவதால் இதற்கு ரஷ்யா அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் வாக்னர் குழு உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காக உக்கிரமாக போரிட்டது. தற்போது வரை ஆயிரக்கணக்கான வீரர்களை அத பலி கொடுத்திருக்கிறது. அதற்கேற்பவாறு உக்ரைனின் பிரதான பகுதிகளையும் கைப்பற்றியது.
ஆனால் இந்த போரில் போதிய ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்றும், தங்களையே ரஷ்ய ராணுவம் தாக்குகிறது எனவும் வாக்னர் குழு தலைவர் விமர்சித்தார். இதனையடுத்து ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவும், அதிபர் புதினுக்கு எதிராகவும் தாக்குதலை தொடுப்பதாக அறிவித்தது. இதனையடுத்து ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான 7 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எனவே தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், பெலாரஸ் அதிபர் வாக்னர் குழு தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து ராணுவத்திற்கு எதிரான போரை வாக்னர் குழு கைவிட்டது. எனினும் வாக்னர் குழுவின் எதிர்ப்பு ரஷ்ய வரலாற்றில் கருப்பு புள்ளியாக பார்க்கப்படுகிறது. எனவே வாக்னர் குழுவுக்கு தடையும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது வாக்னர் குழுவிடம் உள்ள கனரக இராணுவ உபகரணங்களை பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.