சென்னை: சரத்குமார் நடிப்பில் வெளியான பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் குடும்பம் குடும்பமாக ஒரு காலத்தில் மட்டுமின்றி இப்பவும் தியேட்டரை நோக்கி வரவழைத்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான வாரிசு, பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்கள் வசூலில் வேட்டையாடிய நிலையில், சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றுள்ளது.
சரத்குமார் நடித்து சூப்பர் ஹிட்டான சூர்யவம்சம் படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை முன்னிட்டு ட்வீட் போட்டுள்ள சரத்குமார் சூப்பரான ஹாட் அப்டேட் ஒன்றையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
26 ஆண்டுகள் கடந்த சூர்யவம்சம்: இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், தேவயானி, ஆனந்தராஜ் நடித்த சூர்யவம்சம் திரைப்படம் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி வெளியானது.
அந்த படம் தியேட்டரில் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னமும் சூர்யவம்சம் படம் தொடர்பான மீம்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகர் சரத்குமார் அடுத்த படத்திற்கான திட்டத்தை போட்டுள்ளார்.
இது பார்ட் 2 வருஷம்: பொன்னியின் செல்வன் 2, பிச்சைக்காரன் 2 என இந்த ஆண்டு பல பார்ட் 2 படங்கள் வெளியாகி வருகின்றன. அடுத்ததாக இந்தியன் 2, விடுதலை 2 போன்ற பார்ட் 2 படங்களும் தியேட்டரில் வெளியாக காத்திருக்கின்றன.
இந்நிலையில், சூர்யவம்சம் படத்தின் பார்ட் 2வையும் உருவாக்கப் போவதாக நடிகர் சரத்குமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சூர்யவம்சம் பார்ட் 2: “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி! விரைவில் சூர்யவம்சம் – 2!” என ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடித்து பல படங்கள் ஓடாமல் இருந்த நிலையில், அவரது மார்க்கெட் அப்படியே சரிவை சந்திக்க, துணை நடிகராகவே மாறிவிட்டார். வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார், பொன்னியின் செல்வன் 2 படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷாவுக்கு தாத்தாவாக நடித்திருந்தார்.
கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என… pic.twitter.com/21WTB8X9Gz
— R Sarath Kumar (@realsarathkumar) June 27, 2023
போர் தொழில் கொடுத்த நம்பிக்கை: சமீபத்தில் அசோக் செல்வன் உடன் இவர் இணைந்து நடித்த போர் தொழில் படத்தில் இருவருமே ஹீரோ என்கிற நிலை உருவான நிலையில், சரத்குமாருக்கு பெரிய நம்பிக்கை உருவாகி உள்ளது. அதன் வெளிப்பாடே அடுத்து சூர்யவம்சம் 2வை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கி இருப்பது தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சின்ராசுவின் மகன் பெரியாளாக வளர்ந்து அந்த ஊருக்குள் நடக்கும் பிரச்சனைகளை அப்பாவும் மகனும் எப்படி சமாளிக்கின்றனர் என்கிற படமாக சூர்யவம்சம் 2 வருமா? என்றும் சின்ராசுவின் மகனாக இளம் நடிகர்கள் யாராவது நடித்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.